மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.!

அக்டோபர் 6 அன்று மெர்சல் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவித்தார் இயக்குநர் அட்லி. ஆனால் இதுவரை, மெர்சல் படம் தணிக்கைச் சான்றிதழ் பெறவில்லை எனத் தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் – மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள் இசை – ஏ.ஆர்.ரஹ்மான்.

படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று அச்சான்றிதழ் இணைத்துதான் தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கமுடியும்.

இந்நிலையில் மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது தணிக்கை வாரியம்.மெர்சல் படத்தின் தணிக்கைச் சான்று வழங்கப்பட்டது குறித்து விலங்குகள் நல வாரியம் விளக்கம் கேட்டதையடுத்து இந்தத் தகவலை அளித்துள்ளது தணிக்கை வாரியம்.

மெர்சல் படத்தில் புறாக்கள் பறப்பது கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை. மேலும் ராஜநாகத்தின் பெயரை நாகப்பாம்பு எனப் பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் அக்டோபர் 11 அன்று நடந்த துணைக்குழுக் கூட்டத்தில் மெர்சல் படத்துக்கு விலங்கு நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை.

இந்தச் சான்றிதழ் தந்த பிறகே தணிக்கைக் குழுவுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே மெர்சல் படத்துக்குச் சான்றிதழ் வழங்கியது எப்படி என தணிக்கைச் சான்றிதழ் குறித்து விலங்குகள் நல வாரியம், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மெர்சல் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளதாக 6-ம் தேதியே அட்லி அறிவித்த நிலையில் தணிக்கை வாரியத்தின் இந்தத் தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தக் குழப்பத்தால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.இந்நிலையில், இன்று சென்னையின் பிரபலமான ரோகிணி, பரிமளம் ஆகிய தியேட்டர்களில் ‘மெர்சல்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அதனால், இன்று அதிகாலையே டிக்கெட் வாங்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!