உச்சத்தில் சினிமா டிக்கெட் விலை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் பல்வேறு திரைப்பட துறை சங்கங்கள் சினிமா கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கைகள் மற்றும் சினிமா துறை சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், துறை செயலாளர்கள் மற்றும் தமிழ் சினிமா வர்த்தக சபை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்தது.இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில், சினிமா தொழிலில் உள்ள பல்வேறு சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தன.

திருட்டு வி.சி.டி, சினிமா தியேட்டர்களை ஓட்டுவதில் ஆகும் கூடுதல் செலவு, படத்தயாரிப்பு கூடுதல் செலவு மற்றும் கேளிக்கை வரியை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தியது போன்றவை சினிமா தொழிலுக்கு பெரும் இன்னல்களாக உள்ளன என்று குறிப்பிட்டனர்.அவர்களின் கோரிக்கையில், பெருநகர சென்னையில் மல்டிபிளக்ஸ் மற்றும் ஏர்கண்டி‌ஷன் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 160 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 120 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

சென்னை தவிர மற்ற பகுதிகளில், மல்டிபிளக்ஸ் மற்றும் ஏர்கண்டி‌ஷன் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 140 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.100 என்றும் திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.டிக்கெட் கட்டணம் திருத்தம் தொடர்பாக உயர்மட்டக்குழு பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்து அவற்றை ஏற்றுக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதுள்ள அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது.

இப்போதுள்ள அனுமதி கட்டணமாக இருக்கும் 7 ரூபாய், 5 ரூபாய், 4 ரூபாய் ஆகியவற்றை 10 ரூபாயாகவும்; 10 ரூபாய் கட்டணம் 15 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தியேட்டர்களின் கட்டணமும் மாற்றி அமைத்து உத்தரவிடப்படுகிறது. மாநகராட்சி பகுதி ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.62.50 ஆகவும் இருக்கும். அங்குள்ள ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.37.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.நகராட்சிகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும்; ஏ.சி. இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.37.50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

நகர பஞ்சாயத்துகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.31.25 ஆகவும்; ஏ.சி. இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கிராம பஞ்சாயத்துகளில், ஏ.சி. சினிமா தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18.75 ஆகவும்; ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 15 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவுகள் அனைத்தும் 09–10–2017 முதல் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!