அக். 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அக்டோபர் 2-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நடப்பாண்டில், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதியன்று தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.

மேலும், நமக்கு தேவையான அளவு நீர், மேட்டூர் அணையில் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில், காவிரி டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கும், பயறு வகைகளை மாற்று பயிராக சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், 56 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், 12.6.2017 அன்று என்னால் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பொதுவாக, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில், சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நாற்று நடவுமுறை மூலம் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில், இதுநாள்வரை தமிழ்நாடு பெறவேண்டிய இயல்பான மழை அளவான 480.5 மி.மீக்கு 533.4 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.29 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 47,235 கன அடியாகவும் உள்ளது.மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டும், இனிவரும் மாதங்களில் கர்நாடகா நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரினை எதிர்நோக்கியும், இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென இந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியிலிருந்து பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.சம்பா நெற்பயிருக்காக மட்டும் ரூ.2,262.52 கோடி இழப்பீட்டு தொகை, பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 5,63,456 விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று (நேற்று) வரை ரூ.1,762.45 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடு பொருள் மானியமாக, ரூ.2,247 கோடி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும். சம்பா பருவ சாகுபடிக்காக, மேட்டூர் அணையை, அக்டோபர் 2-ந் தேதி திறக்க உள்ளநிலையிலும், பரவலாகப் பெய்துவரும் மழையினை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ரூ.41.15 கோடி மதிப்பீட்டில் சம்பா தொகுப்பு திட்டம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகியவற்றிலும் கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளில் இந்த அரசு செயல்படுத்தும்.

இதன்படி, விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்கான தரிசு உழவுப்பணியினை மேற்கொள்வதற்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு வழங்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பா தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு, சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!