காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு இதில் 7 பக்தர்கள் பலி

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் படின்கு என்ற பகுதி வழியாக 50க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சாலையின் இருபுறமும் மறைந்திருந்த தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது கண்மூடித்தனமாக திடீர் தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.

இரவு 8.30 மணி அளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 7 பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பேருந்தும் குஜராத் பதிவு எண் கொண்டது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். இது திட்டமிட்ட தாக்குதல் என உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதி என அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!