மேற்கிந்திய தீவுகளில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது..!

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக தடையானது. மற்ற 3 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் இந்தியாவை பீல்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்கள் எடுத்தார். 98 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை குவித்தார்.

அதேபோல் கெய்ல் ஹோப் 46 ரன்களை விளாசினார். அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். அபாரமாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 206 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவரிலே இந்த இலக்கை எட்டியது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 111 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 115 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியோடு கோஹ்லி இந்த ரன்களை விளாசினார்.

அவரின் 28வது சதம் இதுவாகும். தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை குவித்தார். இது அவரின் 8வது அரைசதம். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைபற்றிய இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!